தற்போதைய செய்திகள்:

May 23, 2011

பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.


தாமதிக்கப்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப்  படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான  வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.
 

 கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். அதில், வேல்துரை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில் வேட்பு மனுதாக்கலின்போது வேல்துரை தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார், தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் அரசுடன் தொழில் ரீதியாக  தொடர்பு வைத்துக்கொள்ளவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ-ன்படி குற்றமாகும். அவ்வாறு தொடர்பு வைத்தால், தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த 2009-ம் ஆண்டில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மனோஜ் பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பன்சால், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தங்களது தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், வேல்துரை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். மேலும், அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

வேட்பு மனுதாக்கல் செய்தபோது வேல்துரை எம்.எல்.ஏ. தமிழக அரசுடன் தொழில் ரீதியான ஒப்பந்தம் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தெரிவித்துள்ளனர். 

2006 தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரது வெற்றி குறித்த வழக்கு, அவர் முழுமையாக ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து முடித்து, அடுத்த தேர்தலை  சந்திக்கும் நிலையில் அவரது வெற்றி செல்லாது என அறிவிப்பதால் என்ன பலனிருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது? சம்மந்தப்பட்ட வேல்துரை, வேட்பு மனுதாக்கலின்போது தமிழக அரசுடன் ரோடு போடுவதற்கான ஒப்பந்தம் செய்து இருந்தார் என்பதுதான் அதிமுக வேட்பாளரின் குற்றசாட்டு. இந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என நீதிமன்றம் கண்டுபிடித்து தீர்ப்பளிப்பதற்குள் அந்த எம்.எல்.ஏவின் பதவிக்காலமே  முடிந்து விட்டது  என்றால், இந்த வழக்கை தாக்கல் செய்த  அதிமுக வேட்பாளருக்கு என்ன பலன்? சம்மந்தப்பட்ட காங் எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் சொல்லி விட்டதால், அடுத்த இடத்தில் இருந்த அதிமுகவின் மனோஜ்பாண்டியனை சட்டமன்ற உறுப்பினர் என்று அறிவிக்கப் போகிறதா நீதிமன்றம்? இதில் பாதிக்கப்பட்ட மனோஜ்பாண்டியனுக்கு நீதிமன்றம் தரும் பரிகாரம் என்ன?

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த காங் எம்.எல்.ஏ வேல்துரையின்  வெற்றி செல்லாது என நீதிமன்றம் சொல்லியுள்ளதோ அதே  வேல்துரை தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தேர்தலும்  முடிந்துள்ளது. ஒருவேளை இவர் ஜெயித்தால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிவிடுவார். அப்படியானால் ஏற்கனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 9 ஏ வை இவர் மீறிய விஷயத்திற்கு என்ன தண்டனை..? பாமரனுக்கு புரியல. படிச்சவுக சொன்னா தேவலை.
தகவல் : முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!