இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதன் மீது பேசிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை வரவேற்றனர்.
விஜயகாந்த் (எதிர்கட்சி தலைவர்):- முதல்- அமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எனது சார்பிலும், எங்கள் கட்சி சார்பிலும் வரவேற்கிறேன். இந்த பிரச்சினையில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் உள்ளோம். ஆனால் இந்த பிரச்சினையில் இதே சட்டசபையில் இதற்கு முன் என்ன பேசப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். அப்போது முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் இடையிலேயே உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு இலங்கையில் சண்டை நின்று விட்டதாக கூறினார்.
அதன் பிறகு மறுநாள் மீண்டும் சண்டை நடப்பது தெரிய வந்தது. இதற்கு விளக்கம் அளித்த கருணாநிதி மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்றார். இலங்கையில் தமிழ் சமுதாயத்தை அழித்த பெருமையில் கடந்த தி.மு.க. ஆட்சியினருக்கும் பங்கு உண்டு. அங்கு 8 லட்சம் தமிழர்களை காணவில்லை என டி.வி.யில் செய்தி வந்ததை பார்த்தேன். 4 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் இருப்பதாக கருதப்பட்டாலும் மீதமுள்ள தமிழர்கள் எங்கே என்று கேட்டதற்கு வெளிநாடுகளுக்கு சென்று இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இலங்கையில் இளைஞர்கள், தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சமுதாயமே தி.மு.க.வால் வஞ்சிக்கப்பட்டுள்ளது. (உடனே தி.மு.க. வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார்) சபாநாயகர் ஜெயக்குமார்:- நீங்கள் இப்போது குறுக்கிட கூடாது. எதிர்க் கட்சி தலைவர் அவரது கருத்தை சொல்கிறார். அவர் பேசிய பிறகு நீங்கள் பேசலாம்.
விஜயகாந்த்:- சாதாரண குடிமகனாக இருந்து நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் பேசுகிறேன். கடந்த ஆட்சியில் எங்களை பேச விட்டார்களா? முதலில் 20 நிமிடம், பின்னர் 10 நிமிடம், அதன் பிறகு 5 நிமிடம் என்று நேரத்தை குறைக்க தான் செய்தார்கள். நான் என்னுடைய உணர்வுகளை தான் பிரதிபலிக்கிறேன். தி.மு.க. மக்களை வஞ்சித்து விட்டது.
துரைமுருகன் (தி.மு.க.):- முதல்-அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை எங்கள் கட்சி சார்பில் வரவேற்கிறோம். இது தேவையான ஒன்று. இலங்கை பிரச்சினை நீண்ட கால பிரச்சினை. தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே மனமாச் சரியம் இருந்தாலும் இந்த தீர்மானத்தை ஏகோபித்த ஒட்டு மொத்த தீர்மானமாக கருதி வரவேற்கிறோம்.
இலங்கை மீது பொருளாதார தடை தேவையான ஒன்று. சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ):- இலங்கையில் ஐ.நா. குழுவை அவர்கள் அனுமதிக்கவில்லை. செஞ்சிலுவை சங்கத்தையும் அனுமதிக்கவில்லை. அங்கு முற்றிலும் இனப்படு கொலை நடந்துள்ளது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளதை பாராட்டுகிறேன்.
இந்த தீர்மானத்தில் இலங்கை மீது பொருளா தார தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு திருத்தம் கொண்டு வர முடியுமா? என்று பாருங்கள். அதாவது பொருளாதார தடை விதிக்கப்பட்டால் இலங்கை தமிழர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்று திருத்தலாம்.
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு):- இலங்கையில் நடந்த போர் இன அழிப்பு போராக நடந்தது. இதை நேரடியாக ராஜபக்சே நடத்தினாலும் மறைமுகமாக இந்தியாதான் போரை நடத்த உதவியது. யுத்தத்தை தடுத்து நிறுத்த இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால்தான் தமிழக மக்கள் காங்கிரசை தேர்தலில் துடைத்தெறிந்துள்ளனர். காங்கிரஸ் மட்டுமல்ல. அதற்கு துணை போகும் கட்சியையும் தமிழக மக்களை காட்டிக் கொடுக்கும் இயக்கமாகதான் கருதுகிறார்கள்.
என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்):- இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு எண்ணற்ற உதவிகளை செய்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி தனது இன்னுயிரையே கொடுத்தார். இப்போது சட்டசபையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது.
கலையரசன் (பா.ம.க.):- இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பா.ம.க. பாராட்டுகிறது. எங்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இலங்கை பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். எனவே சரித்திர புகழ் வாய்ந்த அரசின் இந்த தீர்மானத்தை பாராட்டுகிறோம்.
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி):- இலங்கையில் போர்க்குற்றம் நடந்த நேரத்தில் இங்கு உண்ணாவிரதம் நாடகம் மட்டும்தான் நடந்தது. அதுவும் ஒரு சில மணி நேரத்தில் நின்று விட்டது. இலங்கையில் தற்போது பொருளாதார தடை மட்டும் போதாது. அந்த நாட்டுடன் உள்ள ராஜிய உறவையும் மத்திய அரசு துண்டிக்க வேண்டும். சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தையும் வர வேற்கிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):- சர்வதேச விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்ட ராஜபக்சேயை போர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அங்குள்ள நிலவரத்தை கண்டறிய முதல்-அமைச்சர் சட்டமன்ற குழுவை அனுப்பி வைக்க வேண்டும். முதல்வரின் தீர்மானத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்.
செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி):- தமிழ் இனமே பாராட்டும் இந்த தீர்மானத்தை இந்திய குடியரசு கட்சி மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
நன்றி – மாலைமலர்
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!