தற்போதைய செய்திகள்:

Aug 3, 2011

கேப்டன் டோனிக்கு கங்குலி கண்டனம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது. தோல்வி குறித்து டோனி பல்வேறு காரணங்களை கூறினார். அதில் தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடி வருவதையும் குறிப்பிட்டார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து எந்தவித காரணமும் கூறி தப்பித்து கொள்ள வேண்டாம். உங்களால் முடியவில்லை என்றால் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். 

அதன்பின் வந்து நீங்கள் அணியில் சேர்ந்து கொள்ளலாம். இது ஒரு முக்கியமான தொடர் என்பது தெரியும். உலகின் நம்பர்1 அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டி இது என்பதும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தோல்விக்கு இப்படிப்பட்ட காரணங்களை கூறாதீர்கள். அடுத்ததாக தோல்வியை ஏற்று கொள்ளும் மனநிலையிலும் நீங்கள் இல்லை. நாம் சரியாக விளையாடாததால் தோல்வி அடைந்து விட்டோம். அது முடிந்துவிட்டது. அதை ஏற்றுகொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வழியை தேட வேண்டும். வீரர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. 

தற்போதுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் 28, 29, 30 வயதுள்ளவர்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் கிரிக்கெட் விளையாட போவதில்லை. விளையாட கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். தேவையில்லாமல் தடுப்பாட்டத்தை இந்திய வீரர்கள் ஏன் மேற்கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவே இல்லை. அதனால் பேட்ஸ்மேன்கள் ஷாட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க நேரிட்டது. சுரேஷ்ரெய்னா, யுவராஜ்சிங், அபிநவ்முகுந்த் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டனர். குறிப்பாக ரெய்னா, யுவராஜ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார்கள்.

இந்திய டெஸ்ட் அணியில் 6வது இடம் இன்னும் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு ஏற்றார்போல் அதிரடியாக ஆடியிருக்க வேண்டாமா?
காம்பீர் காயத்தால் டிராவிட் தொடக்க வீரராகவும், லட்சுமண் 3வது இடத்திலும் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. லட்சுமண் பவுன்சர் பந்துகளை எளிதாக எதிர்கொள்ள கூடியவர். ஆனால் பந்து ஸ்விங்காகி வரும்போது அவர் எப்படி சமாளிப்பார்? 5 அல்லது 6வது இடத்தில்தான் அவரை களமிறக்கி இருக்க வேண்டும். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும்போது 3 தொடக்க வீரர்களை அழைத்து செல்ல வேண்டும் என்பது தெரியாதா? 

சேவாக் காயமடைந்தது ஏற்கனவே தெரியும். அப்படியிருக்கையில் வாசிம்ஜாபரை தேர்வு செய்திருக்க வேண்டியதுதானே. இந்த விஷயத்தில் சிறு குழந்தைபோல் தவறு செய்து விட்டீர்கள். இந்திய பந்துவீச்சாளர்களின் பேட்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. பிராடு, பிரஸ்னன், ஸ்வான் ஆகியோர் அற்புதமாக பந்து வீசினார்கள். பேட்டிங்கும் செய்தார்கள். ஆனால் பிரவீன்குமார், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் ஆகியோர் என்ன செய்தார்கள். 2வது டெஸ்டில் 2வது இன்னிங்சில் மட்டும் ஹர்பஜன் ஓரளவுக்கு விளையாடினார். ஆனால் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் இதைவிட மோசம். 

டிராவிட்டை தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. டெண்டுல்கர் 2வது இன்னிங்சில்தான் பார்முக்கே திரும்பியிருக்கிறார். இன்னும் நமக்கு காலம் இருக்கிறது. நம்பர்1 இடத்தை தக்க வைக்க வேண்டுமென்றால் உடனடியாக மறுசீரமைப்பு அவசியம்.  பிர்மிங்காம் டெஸ்டுக்கு இன்னும் ஒருவார அவகாசம் உள்ளது. அதற்குள் இதை செய்தாக வேண்டும். இளம் வீரர்களை அடுத்தடுத்து உருவாக்க வேண்டும். ஆடுகளத்திற்கு ஏற்றார்போல் வீரர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் விளாசி தள்ளினார்.
Source: Tamilmurasu

1 comments:

ANAS SPARTON said... [Reply]

DADA ALWAYS CRRCT

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!