தற்போதைய செய்திகள்:

Aug 22, 2011

அன்னா ஹஸாரேவின் நோக்கம் தான் என்ன?

லஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் 'போராட்டங்கள்', இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவை ரட்சிக்க முளைத்ததும், அடடா முழு பெருமையும் அவருக்கே போவதா என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் அதற்கு பங்காளியாக முனைந்ததும், அதில் ஹஸாரேவும் பாபாவும் குழாயடிச் சண்டை போட்டதும் மறந்திருக்க நியாயமில்லை.

லோக்பாலுக்கு ஒரு உண்ணாவிரதம், வலுவான லோக்பாலுக்கு இன்னொரு உண்ணாவிரதம், காங்கிரஸ் தலைவர்கள் தன்னை விமர்சித்ததற்காக ஒரு உண்ணாவிரதம், அந்த விமர்சனங்களை விலக்கிக் கொள்ளும் வரை ஒரு உண்ணாவிரதம், ஆகஸ்ட் 15 -ல் 'மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக' தடையை மீறி ஒரு உண்ணாவிரதம், அதற்காக கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்ட பின்னும், தான் சொல்வதைத்தான் அரசு கேட்க வேண்டும் என்ற பிடிவாத உண்ணாவிரதம்... ஆக உண்ணாவிரதம் மட்டும்தான் ஹஸாரேவின் குறிக்கோளா?
இந்த கிளிப்பிள்ளைக்கு உண்ணாவிரதம் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தவர்கள், உண்ணாவிரதம் தாண்டி என்ன செய்யலாம் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்களா?
ஆகஸ்ட் 15 ம் தேதி அறிவித்தபடி தடையை மீறி உண்ணாவிரதம் ஆரம்பித்தார் ஹஸாரே. 'சட்டத்துக்குப் புறம்பான இந்த போராட்டத்தை' அடக்க போலீசார் கைது செய்தனர். திகார் சிறையில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஹஸாரேவின் போராட்ட நோக்கம், அதனால் விளையும் பயன்கள் என்னவென்றே யோசிக்காமல், மெழுகுவர்த்தி ஏந்திய 'உயர்நடுத்தட்டு போலிகளின்' பின்னால் உழைக்கும் மக்களும் அணி திரண்டுவிட்டனர்.
இது ஹஸாரேவின் வெற்றி என்று மீடியா கொண்டாட ஆரம்பிக்க, அரசு இப்போது இறங்கி வந்து சமரசம் பேசுகிறது. இன்று திகார் சிறையில் ஹஸாரே குழுவுக்கும் அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிகழ்ந்த முக்கிய உரையாடல் இது:
அரசு பிரதிநிதி: அன்னாஜி, உங்களுக்கு என்னதான் வேண்டும்... எங்களை வேலை செய்ய விடுங்கள்...
ஹஸாரே: உண்ணாவிரதத்துக்கு என்னை அனுமதிக்க வேண்டும். நான் விரும்புமிடத்தில் இருப்பேன். எந்த நிபந்தனையும் ஏற்கமாட்டேன்.
கேஜ்ரிவால்: எந்த நிபந்தனையையும் ஏற்கமாட்டோம். எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் என்பதை யாரும் முடிவு செய்யக் கூடாது.
அரசுப் பிரதிநிதி: 7 நாட்கள் அதிகபட்சம். வேண்டுமானால் இரண்டொரு நாட்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். எழுத்துப் பூர்வாக வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் விரும்பும் வரை இருக்க எப்படி அனுமதிக்க முடியும்... நகரின் இயக்கம் பாதிக்குமே பரவாயில்லையா...
ஹஸாரே: அதுபற்றி நான் கவலைப்பட முடியாது. நீங்கள் சொல்லும் நிபந்தனைகளையும் ஏற்க முடியாது...
அரசுப் பிரதிநிதி: சரி, உண்ணாவிரதமே வேண்டாம். நீங்கள் வேண்டுவது என்ன... மீண்டும் ஒரு குறைந்தபட்ச சமரசத்தோடு அரசு பேச விழைகிறது. சம்மதமா?
ஹஸாரே: முடியாது. எனக்கு இப்போது நிபந்தனையற்ற அனுமதி வேண்டும். ஒரு மாதமாவது நான் உண்ணாவிரதமிருப்பேன்.
அரசுப் பிரதிநிதி: லோக்பாலில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை குழுவுடன் அமர்ந்து பேசுங்கள். அதன்பிறகே பாராளுமன்றத்தில் வைக்கப்படும். அதுவரை போராட்டத்தை ஒத்திப் போடுங்கள்.
ஹஸாரே, கேஜ்ரிவால்: இல்லை இல்லை... உண்ணாவிரதம்தான் முக்கியம். அதை தள்ளிப் போட முடியாது. நாங்கள் சொல்வதை இப்போது அரசு கேட்கட்டும். மற்றவற்றை அப்புறம் முடிவு செய்யலாம்!
-இது கற்பனை உரையாடல் அல்ல. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை திரும்பத் திரும்ப ஹஸாரே கோஷ்டிக்கும் அரசுப் பிரதிநிதிகள் கோஷ்டிக்கும் இடையே நிகழ்ந்த நிஜ உரையாடலின் ஒரு பகுதிதான்.
ஆக, சமரசமோ பிரச்சினைக்குத் தீர்வோ ஹஸாரேவுக்கும் அவரை பின்னிருந்து ஆட்டுவிப்பவர்களுக்கும் தேவையில்லை. அவர்களது நோக்கம் உண்ணாவிரதம். 'தேசம் ஸ்தம்பித்தது... மக்கள் கொந்தளிப்பு... இரண்டாவது சுதந்திரப்போர் ஆரம்பம்... ஊழல் காங்கிரஸ் விரட்டப்பட்டது' என்ற தலைப்புச் செய்திகள்தான்.
ஒரு எதிர்க்கட்சியாக தங்களால் செய்ய முடியாததையெல்லாம் ஹஸாரே என்ற முகமூடியை வைத்து செய்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டை கிட்டத்தட்ட மெய்ப்பித்தது அருண் ஜெட்லியின் இன்றைய நீ...ண்ட உரை!
அவரது பேச்சை இன்று பாராளுமன்றத்தில் கேட்டேன். லோக்பாலை வலுவாக்க அவர் கோரியதை விட, பிரதமர் மன்மோகன் சிங் கையாலாகதவர் என்பதை மீண்டும் மீண்டும் கூறி பதிய வைப்பதில்தான் குறியாக இருந்தார்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் ஏன் ஹஸாரேவுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருகிறது, கெஞ்சுகிறது என்ற கேள்வியை கேட்காதவர்கள் ரொம்ப குறைவு. கைது செய்யப்பட்ட பிறகு ஒருவர் உண்ணாவிரதமிருந்தால், கட்டாயப்படுத்தி வாயில் உணவைத் திணிப்பது 'திகார் மரபு'. விடுதலை என்று அறிவித்த பிறகு போக மறுத்தால் குண்டுகட்டாக தூக்கிப் போய் எங்காவது இறக்கிவிடுவதும் போலீஸ் மரபுதான். எத்தனை லட்சம் பேர் சிறைக்கு வெளியே காத்திருந்தாலும், போலீஸ் நினைத்தால் அதைச் சாதித்திருக்கிறது. ஆனால் ஹஸாரேவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை!
நல்ல தலையணை, திண்டெல்லாம் போட்டு மார்வாடி மாதிரி அவர் வீற்றிருக்கிறார் அறையில். அவரைத் தேடி அவரது சகாக்கள் வருகிறார்கள். மந்திராலோசனை மாதிரி கூட்டம் நடக்கிறது. பின்னர் கிளம்பிப் போய் வெளியில் உள்ள 'வெள்ளைக் காலரில் அழுக்குப்படாத' கூட்டத்துக்கு செய்தி சொல்கிறார்கள் கிரண்பேடியும், சிசோதியும். அதிலும் இந்த சிசோதி, திடீரென ரிலீசாகி வெளியில் போகிறார்... திடுமென்று உள்ளே வந்து ஹஸாரேயுடன் மந்திராலோசனை நடத்துகிறார்.
அட... என்னதான் நடக்கிறது? இதற்கு முன், இதைவிட நியாயமான காரணங்களுக்காக எத்தனையோ பேர் கைதாகி சிறைவாசம் அனுபவித்தார்களே, அவர்களுக்குக் காட்டப்படாத சலுகைகள் ஹஸாரே கோஷ்டிக்கு ஏன்?
அப்படியெனில், தலைநகரில் இடதுசாரிகள் பேசிக் கொள்வதைப் போல, இந்த ஹஸாரே நாடகத்தில் காங்கிரஸுக்கும் பங்குள்ளதா? ராம்தேவ் நாடகத்தை பிசுபிசுக்க வைத்த காங்கிரஸ், ஹஸாரே நாடகத்துக்கு மட்டும் ஏன் வெற்றிகரமான இரண்டாவது, மூன்றாவது நாள் போஸ்டர்களை அடித்துக் கொண்டிருக்கிறது?
இது ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் நன்றாகவே உள்ளது. நினைத்ததைப் பேசவும், அரசு அனுமதியோடு அதற்கு செயல்வடிவம் தரவும் சட்டம் இடம்தருகிறது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கேற்ப ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இதற்கு புதிய விளக்கங்களைத் தருவது வாடிக்கை. அதே நேரம், தனிமனிதர் ஒருவர் அரசு தன்னிஷ்டப்படி ஆட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரிதானா? எனில் தேர்தல், பாராளுமன்றம், அமைச்சரவை எதற்காக? இதே மிரட்டலை அனைத்துக் குழுக்களும் மேற்கொள்ளலாமா?
எந்த அதிகாரமும் இல்லாத ஒரு நபர், மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு சர்வாதிகாரி போல நடந்துகொள்வதும், மக்கள் பிரதிநிதிகளான பிரதமர் உள்ளிட்டோரை கேவலமாக விமர்சிப்பதும் சரிதானா? எனில் இந்த உரிமையை அனைத்து போராட்டக்காரர்களுக்கும் இனி தருவார்களா மத்திய மாநில அரசுத் தரப்புகளில்? உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்துக்கென இனி குறிப்பிட்ட இடம்தான் என்ற வரையறையை எந்த அரசும் விதிக்கக் கூடாது.
போராட்டக்காரர்கள் விரும்பிய இடத்தில்தான் போராட்டம் நடக்கும் என்ற நிலையை உறுதிப்படுத்துமா அரசு? -இந்தக் கேள்விகளை எழுப்புவோரை உடனே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அல்லது ஊழல் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தவும் ஒரு கூட்டமே அலைகிறது. அவர்களின் குழு மனப்பான்மைக்கு நாம் தலைவணங்கிப் போகமுடியாதல்லவா?
இதில் யாரும் வெளியில் சொல்லாத ஒரு கேவலம் இந்த இரண்டு தினங்களிலும் அரங்கேறி வருகிறது... முக்கிய பிரமுகர்கள் சிலர் ஹஸாரேவுக்கு ஆதரவாக திகார் சிறைக்கு வெளியில் நின்று சீன் போடுவதை மீடியா நன்றாக கவர் செய்ய 'சிறப்பு உபசரிப்புகளை'ச் செய்து வருகின்றனர். குறிப்பாக டிவி சேனல்காரர்களுக்கு. எப்படி இருக்கிறது ஊழல் எதிர்ப்பு லட்சணம்!
இந்த முறை காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்து ஹஸாரேவை அடக்குகிறது... பாஜக முட்டுக் கொடுக்கிறது. அடுத்த முறை, அதிகார கோல் பாஜக கையில் கிடைத்ததும் விழும் முதல் அடியும் ஹஸாரே மீதுதான் இருக்கும், அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்த்து நின்றால்.
இல்லாவிட்டால், ராலேகான் சித்தியின் சர்வாதிகாரியாக அந்த ஐந்துவருடங்களை ஓட்டிவிடுவார் ஹஸாரே... கார்ப்பரேட் தர்மகர்த்தாக்கள் இருக்கும்வரை, ஹஸாரேக்களால் புதுப்புது ஷோக்களை அரங்கேற்ற முடியாதா என்ன?
தகவல்:
தாரிக்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!