தற்போதைய செய்திகள்:

Jul 12, 2011

தந்தையைக் கொன்றவரை 3 மாதங்கள் துப்பு துலக்கிப் பிடித்த மகன்!

News
சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.
மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம்  தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.
ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.
தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.
திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.
சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்.

1 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... [Reply]

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.புஹாரி.

அட்டகாசமான துப்பறிதல் சகோ.

மன உறுதியும் நல்ல சிந்தனைத்திறனும் கொண்டு அத்தோடு தன் தந்தையை மரணத்திற்கு காரணமாகியும் தப்பிச்சென்ற காரை எப்படியும் கண்டுபிடித்தே தீருவது என்ற தீரா லட்சியமும் இணைய உண்மையிலேயே அசத்திட்டார் சகோ.ராஜா முஹம்மத். எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!