தற்போதைய செய்திகள்:

Jul 4, 2011

ராணுவ வீரரின் தீவிரவாத போபியா..


chennai-teen-250சென்னை தீவுத்திடலுக்கு அருகே ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
சென்னை தீவுத்திடல் அருகே இந்திரா நகர் என்ற காலணியை சார்ந்த தில்ஷான் எட்டாம் வகுப்பு படித்துவருகிறான். இவரது தந்தை குமார், தாயார் கலைவாணி ஆவர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் மதிய வேளையில் தில்ஷான் ராணுவக் குடியிருப்பிற்குள் நண்பர்களுடன் அங்கு விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை பொறுக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த ராணுவ வீரர் ஒருவர் தில்ஷானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலையில் தோட்டா பாய்ந்து கீழே சுருண்டு விழுந்துள்ளான் தில்ஷான். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிட்சை பலனளிக்காமல் தில்ஷான் இறந்துவிட்டான்.
தில்ஷான் சுடப்பட்ட தகவலை அவனது நண்பர்கள் பெற்றோரிடம் தெரிவிக்க அவனது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்தவர்கள் அனைவரும் ராணுவ குடியிருப்பின் அருகே திரண்டனர். தில்ஷானின் உடல் கிடைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் இந்திரா நகர் பகுதியை சார்ந்த சிலர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிறுவனை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு சிறுவன் தரப்பினரும் போலீசாரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் ஒருவர் காயமடைந்தார்.
சிறுவனின் கொலையை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், உதயகுமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தில்ஷான் படுகொலைச்செய்யப்பட்டது குறித்து அவனது உறவினர் ஒருவர் கூறியதாவது:ராணுவக்குடியிருப்பின் வளாகத்திற்குள் சென்றது தவறுதான். ஆனால், உள்ளே நுழைந்தவர்கள் தீவிரவாதிகள் அல்லர். பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆவர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் சிறுவனை தீவிரவாதியை போல துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறுவன் கொலைத்தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், நகர போலீசாரும், ராணுவ போலீசாரும் விசாரணை நடத்துவார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டுள்ள தீவிரவாதி போபியாவின் மூலம் தில்ஷான் மட்டுமல்ல அப்பாவி முஸ்லிம்கள் பலர் பலியாகியுள்ளனர் என்பது நிதர்சனமாகும்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!