திருச்செந்தூர் சாலையில் உள்ளது தூத்துக்குடி தலைமை தபால் நிலையம். இங்குள்ள கிணறு சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. தூர் அள்ளியவர்களுக்கு அதிர்ச்சி. காரணம்.. சேற்றுக்கு நடுவே நூற்றுக்கணக்கான தபால்கள். தபால்களை உரிய இடங்களுக்கு சேர்க்காமல் போஸ்ட்மேன்கள் முறைகேடு செய்து வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே உள்ளூர் தபால் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை தபால் நிலைய அதிகாரி ராஜா கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தெரிவித்தார். இதையடுத்து உதவி கோட்ட கண்காணிப்பு அலுவலர் மகபூப் அலி, அஞ்சல் துறை ஆய்வாளர் வசந்தா சிந்துதேவி ஆகியோர் தலைமை தபால் நிலையம் சென்று விசாரணை நடத்தினர். கிணற்றுக்குள் கிடந்த பட்டுவாடா செய்யப்படாத தபால்கள் எந்த பகுதிக்கு செல்லவேண்டியது, அந்த பகுதிக்கான போஸ்ட்மேன் யார் என்று விசாரித்தனர். எல்லா கடிதங்களும் 4 போஸ்ட்மேன்களின் எல்லைக்கு உட்பட்ட தபால்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்தது.
தயங்கியபடியே பேசத் தொடங்கிய அவர்கள், ‘‘இதெல்லாம் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய தபால்கள் இல்லை. எல்லாமே நாங்கள் எழுதிக்கொண்ட கடிதங்கள்தான்’’ என்றனர். ‘‘உங்களுக்கு நீங்களே எதற்காக எழுதிக் கொண்டீர்கள்?’’ என்று அதிகாரிகள் கேட்க, அந்த உண்மை அப்போதுதான் வெளிவந்தது. போஸ்ட்மேன்கள் கூறியதாவது: தபால் சேவை அதிகம் நடக்காத இடங்களை மத்திய அரசு ஆண்டுதோறும் கணக்கெடுக்கிறது. குறைவாக சேவை நடக்கும் இடங்களில் ஆட்களை குறைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
குறைவாக பட்டுவாடா நடக்கும் இடத்தை அருகில் உள்ள பகுதியுடன் இணைத்துவிட்டு, போஸ்ட்மேனையும் டிரான்ஸ்பர் செய்துவிடுவார்கள். எங்கள் ஏரியாவில் அவ்வளவாக யாரும் கடிதம் போடுவது இல்லை. ஆனால், நிறைய தபால் சேவை நடக்கிறது என்று காட்டிக் கொள்வதற்காக நாங்களே நேரம் கிடைக்கும்போதெல்லாம் போஸ்ட் கார்டுகள், இன்லேண்ட் லெட்டரில் சும்மாவாவது ஏதாவது எழுதி தபால் பெட்டியில் போடுவோம்.
போலி முகவரிகள் என்பதால், எல்லாவற்றையும் எடுத்து கிணற்றில் போட்டுவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் இதுபோல ‘தனக்கு தானே’ கடித சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதாக அதிகாரிகள் கூறினர். இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!