சென்னை மக்களின் பொழுது போக்குக்கு உகந்த இடமாக திகழ்வது மெரினாவும், பெசன்ட் நகர் கடற்கரையும்தான். காலையில் வாக்கிங் செல்வோரில் ஆரம்பித்து இரவு வரை ஏராளமானோர் இங்கு குவிகின்றனர். அதிலும், ஏழை, நடுத்தர மக்களுக்கு மெரினா சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது.
சாதாரண நாட்களில் சுமார் 1 லட்சம் பேரும், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சுமார் 5 லட்சம் பேரும் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு மத்தியில், காதலர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பொழுது போக்க வரும் இந்த ஜோடிகள் செய்யும் சேட்டைகள் குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுழிக்க வைக்கின்றது.உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது, கட்டி பிடித்து சில்மிஷம் செய்வது போன்ற செயல்கள் வெட்டவெளியில் சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன. உண்மையாக பொழுதை கழிக்க வரும் குடும்ப பெண்கள் சங்கடத்துக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற செயல்களை பார்த்து தங்களது மகன், மகள் கெட்டு போய் விடுவார்களோ என்று ஒவ்வொரு பெற்றோரும் பயப்பட தொடங்கியுள்ளனர். இதனால், மெரினா கடற்கரையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. தற்போது காதலர்கள் மட்டுமின்றி குடிமகன்களின் புகலிடமாகவும் மெரினா மாறி வருவது வருத்தத்துக்குரிய விஷயம்.காதலர்களின் செயல்களை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இன்னும் கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கடற்கரைக்கு வருவோர் கூறுகையில், ‘‘காலை, மாலை நேரங்களில் கடற்கரை மணல்பரப்புகளில் காதலர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். இதனால், மணல்பரப்புகளில் உட்காராமல் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் உட்கார்ந்து விட்டு செல்கிறோம். கடலில் கால்களை நனைத்து விட்டு செல்லலாம் என்று நினைத்தாலும் மணல்பரப்பில் நடந்து செல்ல முடியவில்லை’’ என்றனர்.மது பாட்டிலால் ரத்த காயம் கடற்கரையை சிலர் மது அருந்தும் பார் போல பயன்படுத்துகின்றனர். இதனால், இரவு நேரத்தில் மணற்பரப்புகள் குடிமகன்களின் கூடாரமாக ஆகிவிடுகிறது. குடித்து விட்டு செல்வோர் அப்படியே பாட்டிலையும் அங்கேயே தூக்கி ஏறிந்து விட்டு செல்கின்றனர்.இதில், உடையும் பாட்டில்கள் காலை நேரங்களில் மணல்பரப்பில் விளையாட்டு பயிற்சி எடுக்கும் மாணவர்கள் மற்றும் கிரிக்கெட், வாலிபால் விளையாடுவோரின் கால்களில் குத்தி கிழித்து வருகிறது. கடற்கரையில் சில்மிஷ செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் விசாரித்து விரட்டி அடித்து வருகின்றனர். ஆனால், போலீசார் அங்கிருந்து சென்றதும், மீண்டும் அந்த இடத்திற்கே வந்து காதலர்கள் சேட்டையை தொடங்குகின்றனர். போலீசாரும் அவர்களை எவ்வளவு தான் விரட்டுவது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். எனவே, கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக ஈடுபடும் வரை காதலர்களின் விளையாட்டை கட்டுப்படுத்த முடியாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!