தற்போதைய செய்திகள்:

Jul 18, 2011

கத்தரில் உருவாகும் உலகின் முதல் குர்ஆன் தோட்டம்!

உலகத்தின் முதல் குர் ஆனிய தோட்டம் (Qur'anic Botanical Garden) வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் உருவாகிறது.

எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தினை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேஷன் ஸிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதன் மூலம் உலகக் கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி நிபுணத்துவ மையங்களுக்கும் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான ஷேக்கா மோஜா நாஸர் அல் மிஸ்னாத் துவங்கி வைத்துள்ளார்.150 க்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்றுள்ள மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக சுவர்க்கத் தோட்டம் (ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்) என்று வர்ணிக்கப்படும் தாவர வகைகள் அனைத்தும் இத் தோட்டத்தில் முதன்மையாக இடம்பெறும்.

உலகில் ஆங்காங்கே அமைக்கப் படும் சாதாரண Botanical Garden போன்றல்லாமல் இந்தக் குர் ஆனிய தோட்டம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப் படுகிறது.

கல்வி, மார்க்க நன்னெறி, அறிவியல் ஆராய்ச்சி, தாவரவியலில் பதப்படுத்துதல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் மற்றும் பல்வேறு நுண்ணாராய்ச்சி விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது" என்கிறார் கத்தர் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் துணைத் தலைவரான டாக்டர் சைஃப் அல் ஹாஜாரி அவர்கள்.

குர் ஆனில் கூறப்பட்டுள்ள தாவரவியலில் சாராம்சத்தினை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் பயன்கள், மருத்துவ முக்கியத்துவம் மற்றும் நவீன அறிவியல் துறையில் இவற்றிற்கான பங்கு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்யும் முறைகளில் இந்த தோட்டம் அமையும்.

யுனெஸ்க்கோ அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation's) சில வருடங்களுக்கு முன்பு சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய தோட்டம் ஒன்றினை அமைக்கத் யோசனை தெரிவித்தபோது, ஏற்கனவே இவ்வம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த இஸ்லாமியத் தோட்டம் அமைக்கும் திட்டம் உருவெடுத்தது.

குர் ஆனிய தோட்டம் மூன்று பகுதிகளாக அமைக்கப் பட உள்ளது. அதன் முதல் படியாக 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள 51 வகையான தாவரங்கள் இதில் பயிரிடப்படும். இவை முறையே கடுகு முதல் குங்குமப்பூ வரையிலும், பரங்கிக் காய் முதல் கற்றாழை வரையிலும், மருதாணி முதல் மாதுளம் பழம் வரை இறைமறை மற்றும் நபிமொழிகளில் இடம் பெறும் அத்துணை வகைகளும் இதில் இடம் பெறும். இது தவிர 350 க்கும் மேற்பட்ட மலர்களின் வகைகளும் இதில் இடம் பெறும்.

விரைவில் இந்தத் தோட்டம் மற்றும் அதில் இடம் பெறும் தாவர வகைகள் ஆகியவை பற்றிய புத்தங்கள், பிரசுரங்கள் மற்றும் இணைய தளம் ஆகியவை மக்களிடையே அறிமுகப் படுத்தப் படும். இதன் மூலம் பண்டைய கால மக்கள் பயன்படுத்தி வந்த மரபு சார் தாவர வகைகளின் பயன்பாட்டிற்கும் இக்கால நவீன அறிவியலுக்கும் ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தப்படும். இது ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும்

இந்த குர் ஆனிய தோட்டம் மூலம் இஸ்லாம் எவ்வாறு உலக அறிவியல் நிபுணத்துவம் மற்றும் மருத்துவத்துறை முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியது என்ற முழு விபரமும் சர்வதேச அளவில் மக்களுக்குச் சென்றடையும். இது நாள் வரை பிற மதத்தினர் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான பல தகவல்களை இந்தக் குர் ஆனிய தோட்டம் முழுமையாக மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் அல் ஹாஜாரி. கத்தார் நாட்டினைத் தொடர்ந்து இவ்வகைத் தோட்டம் அடுத்தடுத்த அரபு நாடுகளில் அமைக்கப்பட உள்ளது.

உலகின் முதன் முதலில் அமையும் இந்த குர் ஆனியத் தோட்டத்தினை முழு உலகிற்கும் பறைசாற்றும் வகையில் இது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக சேர்க்கப் படவும் உள்ளது என்பது கூடுதல் செய்தி.
  

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!