தற்போதைய செய்திகள்:

Jul 30, 2011

ரசாயன கலவைகள் வெடித்து மந்திரவாதி சாவு..


நெல்லை பேட்டையில் செம்பு கலசங்களை தங்கமாக மாற்ற முயன்ற சென்னை மந்திரவாதி சாவு: ரசாயன கலவைகள் வெடித்து சிதறியதால் விபரீதம்சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் கணேஷ் பொன்னம்பலம் (வயது45). மந்திரவாதியான இவர் பில்லி, சூனியம் மற்றும் சித்துவேலைகள் செய்துவந்துள்ளார். நெல்லையை அடுத்த பேட்டை செந்தமிழ்நகர் காமாட்சிநகரை சேர்ந்தவர் அழகியநம்பி. இவர் கணேஷ் பொன்னம்பலத்தின் சித்தப்பா ஆவார்.
 
கணேஷ் பொன்னம்பலம், தனக்கு தாமிரத்தை தங்கமாக மாற்றத்தெரியும் என்று என்று கூறிவந்தார். கணேஷ் பொன்னம்பலத்துக்கு மாந்திரீகம் தெரியும் என்பதால் அவர் தாமிரத்தை தங்கமாக மாற்றினாலும் மாற்றுவார் என்று அழகிய நம்பி நினைத்தார். ஆகவே கணேஷ் பொன்னம்பலத்தை தனது ஊருக்கு வந்து அதனை செய்யுமாறு அழைத்தார். இதனைத்தொடர்ந்து கணேஷ் பொன்னம்பலம் நெல்லை பேட்டையில் உள்ள தனது சித்தப்பா அழகியநம்பி வீட்டுக்கு தனது நண்பர்களான காஞ்சிபுரம் திருக்கழுகுன்றம் பெரியதெருவை சேர்ந்த சங்கர் (37), கல்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் (35) ஆகியோருடன் கடந்த மாதம் நெல்லை வந்தார்.
தாமிரத்தை தங்கமாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த சித்தப்பா வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தை கணேஷ் பொன்னம்பலம் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து செம்பினால் செய்யப்பட்ட கலசங்கள், அலுமினிய தட்டுகள், சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் சில ரசாயன பொருட்களை கணேஷ் பொன்னம்பலம் சேகரித்தார். தான்சேகரித்த பொருட்களுடன் அழகியநம்பியின் வீட்டு பின்பக்கத்தில் உள்ள காலியிடத்தில் பூஜைகள் செய்ய ஏற்பாடுகளையும் செய்தார்.
 
அதற்காக பூஜை செய்ய யாககுண்டமும் அமைத்தார். நேற்று அந்த இடத்தில் தனது பூஜையை கணேஷ் பொன்னம்பலம் தொடங்கினார். தனக்கு உதவியாக தனது நண்பர்கள் சங்கர், கோவிந்தன் ஆகியோரை வைத்துக் கொண்டார். யாககுண்டம் அருகே சிறிய அடுப்பு போன்று அமைத்து, அதில் கரித் துண்டுகளைபோட்டு தீ மூட்டினார். அந்த கங்குகள் மீது அலுமினிய தட்டுகளை வைத்து செம்பு கலசங்களில் சிகப்பு பாஸ்பரஸ்களை பூசி அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார்.
 
தீ கனல்களை தொடர்ந்து ஊதிக்கொண்டு இருந்தார். இதனால் பாத்திரங்கள் சூடேறிக்கொண்டு இருந்தது. விரைவில் செம்பு கலசங்கள் தங்க கலசங்களாக மாறிவிடும். அதன்மூலம் நாம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விடலாம் என்ற ஆசையுடன் கணேஷ் பொன்னம்பலம் இருந்தார். அப்போது அடுப்பில் இருந்த கனல் குறைந்தது. அதை மீண்டும் பற்றவைப்பதற்காக மண்எண்ணையை எடுத்து ஊற்றினார். இதனால் அடியில் இருந்த கங்குகளில் இருந்து “குபீர்”என்று தீப்பிடித்தது. அலுமினிய தட்டுகளுக்கு மேல் சிவப்புபாஸ்பரஸ் பூசி வைக்கப்பட்டு இருந்த செம்பு கலசங்களில் தீ பட்டதால், பாஸ்பரஸ் பற்றி எரிந்தது.
 
இதனால் கலசங்களில் இருந்த ரசாயன கலவைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கணேஷ் பொன்னம்பலம், சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைப்பார்த்த கோவிந்தன் அதிர்ச்சி அடைந்தார். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்ககொண்டு இருந்த கணேஷ் பொன்னம்பலம், சங்கர் ஆகிய இருவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு பாளைஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கணேஷ் பொன்னம்பலம் பரிதாபமாக இறந்தார். சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது பற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஸ்டாலின், பேட்டை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
மேலும் அங்கு வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர்.இந்த விபத்து குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Source: Maalaimalar

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!